ட்விட்டர் என்ற பெயர் வெப்சைட்டிற்கு திரும்பியுள்ளது. வர்ஜீனியாவைச் சேர்ந்த ‘ஆபரேஷன் ப்ளூபேர்ட்’ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், ‘ட்விட்டர்.நவ்’ என்ற புதிய சமூக ஊடகத் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எலான் மஸ்க், ட்விட்டருக்கு ‘X’ எனப் பெயர் மாற்றிய பிறகு, ட்விட்டர் என்ற பெயரும் அதன் நன்கு அறியப்பட்ட சில அறிவுசார் சொத்துரிமைகளும் கைவிடப்பட்டதாக அந்நிறுவனம் கூறுகிறது. பழைய ட்விட்டர் அடையாளத்தைப் பயன்படுத்த ஸ்டார்ட்அப் நிறுவனம் மேற்கொண்ட முயற்சிக்கு சவால் விடுத்துள்ள ‘X கார்ப்பரேஷன்’ உடனான சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தபோதிலும் இந்த அறிமுகம் நிகழ்ந்துள்ளது. ‘ஆபரேஷன் ப்ளூபேர்ட்’ நிறுவனம், தங்களது தளம் ‘X’ நிறுவனத்துடன் தொடர்புடையது அல்ல என்றும், தானியங்கு உண்மைச் சரிபார்ப்பு மற்றும் பயனர்கள் தாங்கள் பார்ப்பவற்றின் மீது அதிகக் கட்டுப்பாட்டைக் கொண்ட ஒரு வித்தியாசமான இணையப் பொதுவெளியை உருவாக்கி வருவதாகவும் கூறுகிறது.
இந்த முழு சர்ச்சை மற்றும் புதிய தளத்தின் உருவாக்கம் ஆகியவற்றின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான சட்ட வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆப்பரேஷன் ப்ளூபேர்டின் நிறுவனர் ஸ்டீபன் கோட்ஸ், எலான் மஸ்க் ட்விட்டரின் பெயரை ‘X’ என மாற்றியபோது , ’ட்விட்டர்’ மற்றும் ‘ட்வீட்’ போன்ற பழக்கமான பெயர்களைக் கைவிட்டார் என்று கூறுகிறார். இந்த சட்ட வாதத்தைப் பயன்படுத்தி, அவரது நிறுவனம் பழைய நீலப்பறவை சின்னம் மற்றும் ‘ட்விட்டர்’ என்ற பெயருடன் ஒரு புதிய தளத்தை உருவாக்கியது. இருப்பினும், எலான் மஸ்கின் நிறுவனமான X, இந்த புதிய நடவடிக்கைக்காக ஆப்பரேஷன் ப்ளூபேர்டுக்கு எதிராக வர்த்தக முத்திரை மீறல் வழக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதிலும், அந்நிறுவனம் தைரியத்தைக் காட்டி அந்தத் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ட்விட்டர் நவ்-வின் முதன்மை நோக்கம், தேவையற்ற சத்தங்கள் மற்றும் போலிச் செய்திகள் இல்லாமல், பயனர்களுக்கு அவர்கள் முன்பு அனுபவித்த உண்மையான அனுபவத்தை வழங்குவதே ஆகும். இதை அடைவதற்காக, இந்தத் தளம் வேரா (VERA) எனப்படும் ஒரு மேம்பட்ட ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் அமைப்பை ஒருங்கிணைத்துள்ளது. இந்த ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் அமைப்பு, தளத்தில் பகிரப்படும் பதிவுகளின் உண்மைத்தன்மையை நிகழ்நேரத்தில் சரிபார்த்து, ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு நம்பகத்தன்மை மதிப்பெண்ணை (Trust Score) வழங்குகிறது. உதாரணமாக, ஒரு பதிவு ஒரு நிகழ்வைப் பற்றி தவறான செய்தியைப் பரப்பினால், வேரா செயற்கை நுண்ணறிவு உடனடியாக அதைக் கண்டறிந்து குறைந்த நம்பகத்தன்மை மதிப்பெண்ணை வழங்கும். மிக முக்கியமாக, இது கட்டுப்பாட்டைப் பயனர்களின் கைகளில் அளிக்கிறது; தங்கள் டைம்லைன் அல்லது ஃபீடில் எவ்வளவு குறைந்த நம்பகத்தன்மை கொண்ட உள்ளடக்கத்தைப் பார்க்க விரும்புகிறார்கள் என்பதை அவர்களே தீர்மானிக்கலாம்.
இதையும் படிங்க Google AI யில் மாஸ் அம்சம் இனி கம்மி பட்ஜெட்டில் பயணம் மற்றும் ஹோட்டல் புக்கிங் ட்ரேக் செய்து கொடுக்கும்
மேலும் பாரம்பரியமான, பாதுகாப்பான சமூக ஊடக அனுபவத்தை விரும்பும் பயனர்களுக்கு, ட்விட்டர் நவ் ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். தற்போது, இந்நிறுவனம் இதை பொதுமக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்குவதற்குப் பதிலாக, ‘முன்கூட்டிய அணுகல்’ மாதிரியில் வைத்துள்ளது; பயனர்கள் $20 (சுமார் ரூ. 1,650) செலுத்த வேண்டும். இந்தத் தளம் சட்டரீதியான தடைகளைத் தாண்டிவிட்டால், சமூக ஊடகங்களில் உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மை மற்றும் பிராண்ட் அங்கீகாரத்திற்கான போராட்டத்தில் இது ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் நம்புகிறார்கள்.