வாட்ஸ்அப் புதிய பீட்டா வெர்ஷனில் பேஸ்புக்கின் புதிய பெயர்- மெட்டா தோன்றுகிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பீட்டா வெர்ஷன்களில் வாட்ஸ்அப் பிரம் மெட்டா என காட்சியளிக்கிறது. இதுவரை வாட்ஸ்அப் பிரம் பேஸ்புக் என்றே தோன்றிவந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மாற்றம் அனைத்து பயனர்களுக்கும் இதுவரை வழங்கப்படவில்லை. அனைவருக்கும் இந்த மாற்றம் அமலாக மேலும் சிலகாலம் ஆகும் என்றே தெரிகிறது. கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் தனது புதிய பெயரை அறிவித்தது. இத்துடன் சமூக வலைதள நிறுவனமாக மட்டும் இல்லாமல், மெய்நிகர் ஆன்லைன் உலகமாக மெட்டாவெர்ஸ் நோக்கி கவனம் செலுத்த போவதாக தெரிவித்தது.
புது மாற்றம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.21.22.21 வெர்ஷனில் காட்சியளிக்கிறது. இது வாட்ஸ்அப் ஸ்பிலாஷ் ஸ்கிரீன் மற்றும் செட்டிங் மெனுவில் காட்சியளிக்கிறது. பீட்டா வெர்ஷனிலும் இந்த மாற்றம் அனைத்து பயனர்களுக்கும் தோன்றவில்லை.
வாட்ஸ்அப் ஹெட் வில் கேத்கார்ட் கடந்த வாரம் ட்வீட் செய்து, வரும் வாரங்களில் வாட்ஸ்அப் அதன் ஆப்ஸ் மற்றும் இணையதளம் இரண்டிலும் மெட்டா பிராண்டிங்கைக் காட்டத் தொடங்கும் என்பதை உறுதிப்படுத்தினார். வரும் எதிர்காலத்தில் நிலையான வாட்ஸ்அப் பதிப்பில் பயனர்களுக்கு அப்டேட் வரக்கூடும் என்று இது அறிவுறுத்துகிறது