‘இந்த மாதம் வாட்ஸ்அப் மாதம்’ என சொல்லும் அளவுக்கு வார வாரம் புதுப்புது அப்டேட்கள் வெளியான வண்ணம் உள்ளன. மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் ஆனது அதன் பாதுகாப்பு மற்றும் இதர வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. வாட்ஸ்அப் யூஸர்களுக்கு பல பாதுகாப்பு அம்சங்களையும், வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைப்பது, ஒருமுறை மட்டுமே பார்க்ககூடிய டெக்ஸ்ட் மற்றும் புகைப்படங்களை அனுப்புவது, டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் போன்ற அம்சங்களை அறிமுகப்படுத்தி இருந்தது.
தற்போது விரைவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன் பயனர்களுக்கு புதிய அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது நீக்கப்பட்ட செய்திகளை மீட்டெடுக்கும் திறன் மற்றும் குழு நிர்வாகிகள் ஒரு குழுவில் உள்ள எந்த செய்தியையும் நீக்குவதற்கான அதிகாரம் என இரண்டு அப்டேட்கள் உள்ளன.
வாட்ஸ்அப் குரூப்பில் உள்ள எந்த யூஸரும் பதிவிடும் செய்தியை நீக்கும் அதிகாரம் அட்மினுக்கு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் குழு நிர்வாகிகள் தாங்கள் நிர்வகிக்கும் குழுவில் உள்ள எந்தவொரு பயனரும் பதிவிடும் எந்த செய்தியையும் நீக்க முடியும். இதுகுறித்து வாட்ஸ்அப் டிராக்கரான WABetaInfo வெளியிட்டுள்ள தகவலில், இந்த அம்சம் தற்போது iOS க்கான வாட்ஸ்அப்பில் சில பீட்டா யூஸர்களுக்கு மட்டுமே சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. “இந்த புதிய அப்டேட் கிடைக்கிறதா என்பதைச் சரிபார்ப்பதற்கான விரைவான வழியை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் நிர்வாகியாக இருக்கும் குழுவிலிருந்து ஏதேனும் சமீபத்திய செய்தியை நீக்க முடியுமா என்பதைச் பரிசோதித்து பார்க்கலாம்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அம்சம் ஏற்கனவே ஸ்லாக்கில் உள்ளது. ஆனால் ஸ்லாக்கில், குழு நிர்வாகி யாருக்கும் தெரியாமல் செய்தியை நீக்க முடியும். ஆனால் வாட்ஸ்அப்பில், குரூப் அட்மின் ஒருவரின் மெசேஜை டெலிட் செய்தால், இந்த மெசேஜ் குரூப் அட்மின் மூலம் டெலிட் செய்யப்பட்டு விடும். அதாவது இந்த செய்தியை குரூப் அட்மின் டெலிட் செய்து விட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.
வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பும் போது சில சமயங்களில் தெரியாமல் ஏதாவது மெசெஜை அனுப்பிவிடுவோம். அதனை அவசர அவசரமாக டெலிட் செய்ய முயற்சிக்கும் போது, ‘Delete for everyone' என்பதற்கு பதிலாக ‘Delete for me' என்று கொடுத்துவிடுவோம். இதனை மீட்டெடுக்கும் வகையில் undo delete என்ற ஆப்ஷனை வாட்ஸ்அப் கொண்டு வர உள்ளது. இந்த வசதி மெசெஜை அனுப்பியதில் இருந்து எவ்வளவு நேரத்திற்குள் வேலை செய்யும் என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
WABetaInfo படி, iOS பீட்டா பதிப்பிற்கான WhatsApp மேற்கூறிய அம்சங்களை பதிப்பு 22.18.0.70 இல் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது, ஒரு சில பீட்டா பயனர்கள் மட்டுமே அம்சத்தை சோதிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது