கன்னட மொழியில் உருவான ‘காந்தாரா’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை அசால்டாக தாண்டியது. தற்போது இந்தப் படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி டப்பிங் வெர்ஷன்கள் வசூலை குவிக்கின்றன.
ரிஷப் ஷெட்டி, சப்தமி கௌடா, மானசி, கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் கன்னட மொழியில் காந்தாரா திரைப்படம் கடந்த மாதம் 30-ஆம் தேதி வெளியாகி கர்நாடகாவில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. பான் இந்தியா திரைப் படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருந்ததால், காந்தாரா திரைப்படத்தை மற்ற இந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டது. இதனடிப்படையில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் காந்தாரா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த படத்தை கே.ஜி.எஃப் முதல் மற்றும் 2-ஆம் பாகத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனைத்து முக்கிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளதால் மெல்ல மெல்ல ரசிகர்களிடையே காந்தாரா படம் ரீச்சாகி வருகிறது. படத்தைப் பார்த்த பலரும் இயக்குநர் ரிஷப் ஷெட்டியை புகழ்ந்தும், படத்தை பாராட்டியும் எழுதி வருகின்றனர்.
ஐ.எம்.டி.பி. படங்களின் ரேட்டிங்கில் இந்திய அளவில் காந்தாரா திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்திற்கு 9.5 புள்ளிகளை ரசிகர்கள் அளித்துள்ளனர். 8.9 புள்ளிகளுடன் ஜெய்பீம் இரண்டாவது இடத்திலும், 8.4 புள்ளிகளுடன் கேஜிஎப் 2 படம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. காந்தாரா திரைப்படம் கர்நாடகாவில் சிறு தெய்வ வழிபாட்டுடன், மலைப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை குறித்து படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நிலத்திற்காக நடக்கும் பிரச்சனையை படத்தின் மையக்கருவாகி இருந்தார் ரிஷப் ஷெட்டி. அதில் எருமை மாடுகளை கொண்ட விளையாட்டு போட்டி காட்சிகளாக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் பாராட்டுகள் குவிந்தாலும், காந்தாராவுக்கு எதிராகவும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.