பீஸ்ட் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி – திரில்லர் திரைப்படம். இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிக்கும் 65வது படமாகும். திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் நிர்மல் எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படம் 2022 ஏப்ரல் 13ல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகிறது.
பீஸ்ட் படத்தில் இடம் பெற்றுள்ள 'அரபிக் குத்து' பாடல் யூ டியூப் செயலியில் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றும் இந்திய அளவில் அதிக லைக்ஸ் வாங்கிய பாடலாக புகழ் பெற்றுள்ளது. இப்பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுத அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி பாடியுள்ளனர்.
இப்படத்தின் இரண்டாம் சிங்கிள் 'ஜாலியோ ஜிம்கானா' பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். இப்பாடலுக்கு பாடலாசிரியர் கு. கார்த்தி பாடல் வரிகள் எழுதியுள்ளார்.
பீஸ்ட் திரைப்படம் நடிகர் விஜய் நடிக்கும் 65வது (தளபதி 65) திரைப்படமாகும். வேட்டைக்காரன் (2009), சுறா (2010), சர்கார் (2018) படங்களுக்கு பின்னர் இப்படத்தின் மூலம் நான்காவது முறையாக விஜய் – சன் பிக்சர்ஸ் கூட்டணி அமைந்துள்ளது.
தளபதி 65 படத்தினை இயக்க அஜய் ஞானமுத்து, பாண்டிராஜ், சுதா கொங்கரா, ஷங்கர், மகிழ் திருமேனி மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் ஏ.ஆர். முருகதாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆனால் முருகதாஸ் இயக்கவிருந்த கதையில் இரண்டு விஜய் மற்றும் படத்தின் பட்ஜெட் 100 கோடிகளை தாண்டியது, அதனால் இந்த கூட்டணி கைவிடப்பட்டு, இறுதியில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் – விஜய் கூட்டணி அமைந்துள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து பீஸ்ட் படத்தினை இயக்கியுள்ளார், இவரது முந்திய படங்கள் நகைச்சுவை வண்ணத்தில் ஒரு அதிரடி படமாக அமைந்து திரை ரசிகர்களை மகிழ்வித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதே பாணியில் பீஸ்ட் திரைப்படமும் நகைச்சுவை வண்ணத்தில் ஒரு அதிரடி படமாக அமைந்துள்ளது.